Donnerstag, 15. Januar 2015

பாணர்

ஸ்ரீரங்கம் அருகில் ஒரு அழகான சிற்றூர். இவ்வூரில் பாணர் இனத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் இருந்தார். இப்பக்தர் ஸ்ரீரங்கநாதர் மீது மிகுந்த பக்தியும், நன்றாகப் பாடும் திறமையும் கொண்டவர். ஆலயம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்ய அவர் பிறந்த குலம் தடையாக இருந்தது. அதனால், அவர் தினமும் காவிரியின் கரையில் நின்றபடி ரங்கநாதர் கோயிலைப் பார்த்து இரு கரம் கூப்பித் தொழுது பாடிச் செல்வார். ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் லோக சாரங்கி. ஒருநாள் இவர் கோயில் கைங்கர்யம் செய்வதற்காக காவிரியில் நீராடிவிட்டு வந்தார். பாணர் அர்ச்சகர் வரும் பாதையில் நின்று கண்களை மூடி ரங்கநாதரை நினைத்து மிக உருக்கமாக பாடிக்கொண்டிருந்தார். அர்ச்சகர் வருவதை இவர் அறியவில்லை. உடனே அர்ச்சகர், ஏய்... பாணா? ஒதுங்கி நில். நான் கோயிலுக்கு அவசரமாக செல்ல வேண்டும், என்றார். இறைவனிடம் மனம் லயித்திருந்த பாணனுக்கு அர்ச்சகர் கூறிய வார்த்தைகள் கேட்கவில்லை. அதனால், அர்ச்சகர் ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசினார்.
கல் பாணர் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. பாணர் கண் திறந்து பார்த்தார். ஐயோ! அர்ச்சகர் வரும் பாதையில் நின்று அபச்சாரம் செய்துவிட்டோமே என்று வருந்தி தள்ளி நின்று மீண்டும் பாட ஆரம்பித்தார். அர்ச்சகர் கோயிலுக்கு போனார். அங்கே ரங்கநாதரைப் பார்த்த அர்ச்சகர் பயந்து திகைத்தார். சிலையின் நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஐயோ! இது என்ன? அபச்சாரம்? என்று கதறியபடி சுவாமியின் நெற்றியில் இருந்து வழியும் ரத்தத்தைத் துடைத்தார். ரத்தம் நிற்கவில்லை. மறு படியும் துடைத்தார். ரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டே இருந்தது. ரங்கநாதா! இது என்ன சோதனை? யாரால் இது விளைந்தது? என்று உருக்கமாகக் கேட்டார். அப்போது, லோகசாரங்கி! உமது செயலால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரிக்கரையில் என் பக்தன் பாணன் மீது கல் வீசினீரே, அக்கல் அவன் மீது மட்டும் பட்டு ரத்தம் வடியவில்லை. என் நெற்றியிலும் பட்டு ரத்தம் வழிகிறது. நான் பக்த பாராதீனன் இல்லையா? என்று அசரீரி ஒலித்தது. ரங்கநாதா! தவறு செய்துவிட்டேன். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்று கதறினார். ஹே... லோக சாரங்கா! என் பக்தன் பாணனை உம் தோளில் சுமந்து என் சன்னதிக்கு அழைத்து வாரும். அப்போதுதான் ரத்தம் நிற்கும் என்றது அசரீரி. உடனே அர்ச்சகர் அங்கிருந்தவர்களிடம் எல்லோரிடமும் தான் செய்த தவறையும், பெருமாளின் உத்தரவையும் கூறி, பாணனை அழைத்துவர காவிரிக் கரைக்கு சென்றார். பாணரிடம் நடந்த விபரத்தைச் சொல்லி பொறுத்தருளுமாறு வேண்டினார்.

சுவாமி! நான் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவன். நான் கோயிலுக்குள் வரக் கூடாது. என்னால் வரமுடியாது என்றார். இல்லை பாணரே! நீர் அப்படி சொல்லக்கூடாது. நீர் பெரும் பாக்கியம் செய்தவர். பெருமாளே உம்மை என் தோளில் சுமந்துவரச் சொன்னார் என்றார் அர்ச்சகர். பாணர் அர்ச்சகர் தோளில் அமர சங்கடமும் கூச்சமும் கொண்டார். ஆனால், அரங்கன் கட்டளையாயிற்றே. என்ன செய்வது என்று கண்களை மூடி ஒரு கணம் ஸ்ரீரங்கநாதரை தியானித்தார். அவரைத் தோளில் ஏற்றிச் சுமந்து ரங்கநாதர் சன்னதி முன் கொண்டுவந்து இறக்கினார் அர்ச்சகர். அரங்கனின் சன்னதிக்குள் சென்றார் பாணர். மனம் உருக அரங்கனின் திருமுடி முதல் திருவடி வரை வர்ணனை செய்து பத்துப் பாடல்கள் பாடினார். அப்படியே அரங்கனின் ஜோதியில் ஐக்கியமானார்.

வியாழக்கிழமை


Mittwoch, 14. Januar 2015

பாவம்-2

ஒரு அந்தணரும் அவரது மனைவியும் தங்கள் இரண்டு வயது குழந்தையுடன் காட்டுப்பாதையில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வழியில் ஓரிடத்தில் களைப்பாய் இருக்கவே, தாகசாந்தி செய்ய எண்ணினர். அந்தணர், மனைவியை குழந்தையுடன் ஒரு மரத்தடியில் அமர வைத்தார். அவள் களைப்பில் மரத்தடியில் படுத்தாள். கூஜாவுடன் அருகில் தெரிந்த நீரோடையை நோக்கிச் சென்றார்.அந்த மரத்தின் மீது யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு கிளைகளிடையே தங்கி நின்றது. சற்றுநேரத்தில் காற்றடிக்கவே, கிளையில் தொக்கி நின்ற அம்பு படுத்திருந்த அந்தப் பெண்ணின் வயிற்றில் தைத்தது. அது விஷம் தோய்ந்த அம்பு. விஷம் உடலில் பரவி அவள் இறந்தாள். அப்போது அங்கே ஒரு வேடன் வந்தான். ஒரு பெண் இறந்து கிடப்பதையும், அருகில் அவளது குழந்தை அழுது கொண்டிருப்பதையும் பார்த்தான். இதற்குள் அந்தணரும் வந்து விடவே, வயிற்றில் அம்பு தைத்து இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தார்.அருகில் நின்ற வேடன் மீது சந்தேகம் கொண்டு, என்ன நோக்கிலடா என் மனைவியைக் கொன்றாய்? நீ வேட்டைக்காரனா? அல்லது காமுக நோக்குடன் இப்படி செய்தாயா? நீ நல்லவன் என்றால், கடவுளின் மீது சத்தியமாக இங்கிருந்து ஓடக்கூடாது. என்னோடு உன் ஊர் மன்னனைக் காணவா! அவன் தீர்ப்பளிக்கட்டும், என்றார்.வேடன் கெஞ்சினான்.அந்தணரே! உமது மனைவியை நான் கொல்லவில்லை.
நான் ஏதுமறியாதவன். உமது மனைவியின் இறப்புக்கு காரணமும் எனக்குத் தெரியாது, என கெஞ்சினான்.அவனை நம்பாத அந்தணர், மனைவியின் உடலை தோளிலும், ஒரு கையில் குழந்தையுடனும் அரண்மனைக்கு வந்தார். மன்னனிடம் புகார் சொன்னார்.வேடன் மன்னனிடம், தான் ஏதுமறியாதவன் என புலம்பித் தீர்த்தான். அவனை சேவகர்கள் அடித்தும் மிரட்டியும் பார்த்தன். மன்னா!என்னைக் கொல்லுங்கள். வேண்டாம் என சொல்ல வில்லை. ஆனால், நான் சாகும் முன் உண்மை செத்துவிடக்கூடாது, என்றான்.மன்னன் அவனை சிறையில்அடைத்து விட்டு, அந்தணரிடம், உம் மனைவியின் ஈமக்கிரியையை முடித்து விட்டு நாளை வரும், என சொல்லிவிட்டான்.மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று, சுந்தரேஸ்வரா! தவறான தீர்ப்பை நான் வழங்கி விடக்கூடாது. அதற்கு நீயே அருள் செய்ய வேண்டுமென பிரார்த்தித்தான். அன்றிரவு கனவில் வந்த சுந்தரேஸ்வரர், மன்னா! நீ நாளை மாசிவீதியிலுள்ள மண்டபத்தில் நடக்கும் திருமணத்துக்கு செல். உண்மை தெரியும், என்றார்.மறுநாள் மன்னனும் அந்தணரும் மாறுவேடத்தில் அங்கு சென்றனர்.அப்போது சமையலறையில் இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஆனால், பேசுபவர்களின் உருவம் தெரியவில்லை.

தூதனே! நம் எமதர்ம மகாராஜா, இந்த மண்டபத்தில் திருமணம் செய்யப்போகும் மணமகனின் உயிரைப் பறிக்க உத்தரவிட்டுள்ளார்.இவனோ மணமேடையில் ஆரோக்கியத்துடனும், உறவினர்கள் புடைசூழவும் இருக்கிறான். என்ன செய்வது? என்றது ஒரு குரல். மற்றொரு குரல், தூதர் தலைவரே! கவலை வேண்டாம். நேற்று காட்டில் இருந்த அந்தணரின் மனைவியின் மீது மரத்தில் தங்கியிருந்த விஷ அம்பை எப்படி அவளது வயிற்றில் விழச்செய்து உயிரைப் பறித்தோமோ, அதே போல இந்த தெருவில் நிற்கும் காளையை மிரளச்செய்து மண்டபத்திற்குள் விரட்டி விடுவோம். கூட்டம் கலைந்தோடும் போது, காளை மணமகனை முட்டிக் கொல்லட்டும், என்றது. மன்னரும் அந்தணரும் உண்மை நிலையைப் புரிந்து கொண்டனர். வேடனிடம் மன்னிப்பு கேட்டார் அந்தணர். சிறையில் வைத்ததற்காக மன்னன் அவனுக்கு ஏராளமான பொருளை நஷ்ட ஈடாக கொடுத்து அனுப்பி வைத்தான்.

புதன்கிழமை


Dienstag, 13. Januar 2015

கவலை

கண்ணன் கவலையுடன் இருந்தான். கோயிலுக்கு சென்ற அவன் சரஸ்வதி சன்னதிதானத்தில் நின்று கொண்டு, அம்மா, தாயே! என் வகுப்பில் படிக்கும் பல மாணவர்கள் என்னை விட நன்றாகப் படிக்கிறார்கள். நேற்று குருநாதர் ராமாயணம் கற்றுத் தந்தார். நான் ஏதோ ஒரு மனநிலையில் இருந்தேன். ஆசாரியர் சொல்லித் தந்ததை கவனிக்கவில்லை. கடைசியில் ராவணனின் தம்பி யார் என்று கேட்டார். நான் என் காதில் விழுந்த ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி வைப்போமே என்று லட்சுமணன் என சொல்லி விட்டேன். மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். குருநாதர் என்னை போடா ஞானசூன்யமே என விரட்டி விட்டார். நான் வருத்தப்பட்டேன். அதே நேரம் அந்த கேலி சிரிப்பு என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தாயே! தயவு செய்து என்னையும் ஒரு கலாவல்லவன் ஆக்கி அருள் புரிவாய், என்றான்.சரஸ்வதி சிலையைக் கட்டிக் கொண்டு அழுதான். கருணைக்கடலான அந்த கல்வி தெய்வம் கண் விழித்தாள்.
மகனே! கவலைப்படாதே, யாரையும் நான் அறிவின்றி படைப்பதில்லை. ஆனால், குரு சொல்லிக் கொடுக்கும் போது, நீ அதைக் கவனியாமல், விளையாடிக் கொண்டிருந்தது உன் தவறுதானே! இனியேனும் இத்தவறைச் செய்யாதே. மேலும், பிறர் கேலி செய்வதை நாம் பொருட்படுத்தக் கூடாது. அந்த கேலிச்சொற்களை புகழுரையாக மாற்றிக் காட்ட வேண்டும். இதற்காக நான் உனக்கு அருள்புரிய மாட்டேன். நீயே சுயகட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க வேண்டும். அப்படி செய்து பார். மற்றவர்களை விட நீயே உயர்ந்த ஸ்தானத்திற்கு வருவாய், என்று கூறி மறைந்தாள். கண்ணன் இன்னொரு குருகுலத்திற்கு சென்றான். அவன் தன் குருகுலத்தில் இருக்க தகுதியுடையவன் தானா என அங்கிருந்த ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்டார். கண்ணன் அவரிடம், நடந்த விஷயத்தைச் சொன்னான். ஐயா, எனக்கு படிப்பில் அக்கறையின்மை இருந்தது. அதனால் ஏற்கனவே படித்த குருகுலத்தில் இருந்து விலக்கப்பட்டேன். நீங்கள் கேட்கும் கேள்விளுக்கு எனக்கு பதில் தெரியாது. என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக் கொண்டால், இனியேனும் நன்றாகப் படித்து தங்களிடம் நற்பெயர் பெறுவேன். என் மீது வீசப்பட்ட கேலிச் சொற்களை புகழுரையாக மாற்றிக் காட்டுவேன், என்றான். அவன் மீது இரக்கப்பட்ட குருநாதர், அவனை குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார். கண்ணன் புத்தகமும் கையுமாக அலைந்தான். வகுப்பில் மிக கவனமாக பாடங்களைக் கேட்டான். எதைக் கேட்டாலும் மணியடித்தது போல டாண் டாண் என பதில் சொன்னான்.

தினமும் அச்சிறுவனுக்கு ஆசிரியர் வேப்பிலை துவையல் வைத்து கஞ்சி கொடுத்தார். கண்ணன் துவையலை நாக்கில் தடவிக் கொண்டே கஞ்சி குடிப்பான். ஆனால், அது வேப்பிலை துவையல் என்ற சமாச்சாரமே அவனுக்கு தெரியாது. ஏனென்றால், சாப்பிடும் போதும் புத்தகத்தை கீழே வைக்க மாட்டான். படித்துக் கொண்டே சாப்பிடுவான். படிப்பின் மீதிருந்த அக்கறையில், சாப்பாட்டு சுவையெல்லாம் அவனுக்கு தெரியவே இல்லை. எல்லாப் பாடங்களிலும் நன்றாகத் தேறினான்.  ஒருநாள் குரு புத்தகமும், கஞ்சியுமாய் இருந்த சீடனை அழைத்தார். குரு கூப்பிடவும், துவையலை கண்ணன் எடுத்து வாயில் தடவவும் சரியாக இருந்தது. வாய் கசந்தது. அதற்கான காரணத்தை குருவிடம் கேட்டான். மாணவனே! நான் தினமும் உனக்கு வேப்பிலை துவையல் தந்தும் நீ படிப்பின் மீதிருந்த அக்கறையால் அதன் சுவையை உணரவில்லை. இன்று திடீரென கூப்பிடவும் சுவை தெரிந்தது. இந்த துவையலுக்கு பயந்தே பல மாணவர்கள் ஓடிவிட்டனர். நீயும் இன்னும் சிலரும் தான் எனது பரீட்சையில் தேறியுள்ளீர்கள். அதிலும் நீ மற்ற மாணவர்களை விட முன்னணியில் இருக்கிறாய், என்று பாராட்டினார். கண்ணன் மகிழ்ந்தான்.

செவ்வாய்க்கிழமை


Montag, 12. Januar 2015

ஆசை-3

இலங்கை வேந்தன் ராவணனுக்கு ஓர் ஆசை.தேவர்கள் எனக்கு அடங்கி பயந்து நடக்கிறார்கள். பல அரக்கர்களை நான் வென்றிருக்கிறேன். என்றாலும் அருகில் உள்ள தமிழகம் மட்டும் என் ஆளுகைக்குள் வராமல் உள்ளது. எனவே தமிழகத்தை வென்று அதை நம் ஆளுகைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆசை.உடனே அவன் தன் புஷ்பக விமானத்தில் தன்னுடைய சகாக்களுடன் பொதிகை மலைக்கு வந்தான். அங்கே அகத்திய முனிவரைச் சந்தித்தான். ராவணனின் நோக்கம் அகத்தியருக்குப் புரிந்துவிட்டது. தவவலிமையால் ஒப்புயர்வற்ற சிவபெருமானிடமிருந்து ஒப்பற்ற தமிழ்மொழியைப் பெற்ற அகத்திய முனிவருக்கு வணக்கம், என்றான் பணிவுடன். சிவனைக்குறித்து பலவகையான தவங்கள் இயற்றி, அதன் பயனாய் மூன்று கோடி வருடம் ஆயுளைப்பெற்ற ராவணன் என் இருப்பிடத்திற்கு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். வா! வா! என்று வரவேற்றார் அகத்தியர். ராவணன் தன் வருகையின் உள்நோக்கத்தை தானே வெளிப்படையாகச் சொல்லும்படி செய்தார் அகத்தியர்.
ராவணா! இலங்கையில் இருக்க வேண்டிய நீ தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதன் நோக்கம் என்னவோ? என்று கேட்டார் அகத்தியர்.முனிவர் பெருமானே! தமிழகத்தை என் ஆட்சிக்கு உட்படுத்த எண்ணியிருக்கிறேன். அதன்பொருட்டு நிலைமையை ஆராய வந்துள்ளேன் என்றான் ராவணன். ராவணா! நீ யாழ் இசைப்பதில் வல்லவன் அல்லவா? என்று கேட்டார் அகத்தியர். ஆம். பெரும் வல்லவன். அதிலென்ன சந்தேகம்? என்று ஆணவத்துடன் பதில் சொன்னான். அப்படியானால் நீ முதலில் என்னை யாழ் இசையில் வெல்ல வேண்டும். என்னை ஜெயித்தால் மட்டுமே, தமிழகத்தை வெற்றி கொள்ள நினைக்கும் உன் எண்ணம் ஈடேறும். இல்லாவிட்டால் உன் ஆசை நிறைவேறாது என்றார் அகத்தியர். அப்படியே ஆகட்டும். யாழ் இசைப்பதில் உங்களிடம் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டுகிறேன், என்றான் ராவணன். அகத்தியருக்கும், ராவணனுக்கும் யாழ் இசை போட்டி நடைபெறப் போகிறது என்ற செய்தி எங்கும் பரவியது. ராவணன் யாழ் மீட்பதில் வல்லவன் என்பது அகிலம் அறிந்த ஒன்று. ஆனால், அகத்தியருக்கு யாழ் வாசிக்கத் தெரியும் என்பது இப்போதுதான் மக்கள் கேள்விப்பட்டார்கள். இசைப்போட்டிக்குரிய மேடை அமைக்கப்பட்டது. போட்டியைக்காண மக்கள் குழுமியிருந்தார்கள். போட்டி ஆரம்பமாயிற்று.

ராவணா! முதலில் நீ வாசிக்கிறாயா? அல்லது நான் வாசிக்கட்டுமா? என்றார் அகத்தியர். ராவணனுக்குத் தன் திறமையில் அதீத நம்பிக்கை இருந்தது. அகத்தியர் தோற்கப்போவது என்னவோ உறுதி. அப்படியிருக்க அவர்தான் முதலில் வாசிக்கட்டுமே என்று மனதிற்குள் நினைத்தவாறு, முதலில் நீங்களே வாசியுங்கள். தங்களது வாசிப்பில் மயங்கி என் உள்ளம் உருகிவிட்டால், நீங்களே வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்ளலாம், என்றான். ராவணா! உன் உள்ளம் உருகுகிறதா இல்லையயா? என்பதை வெளியில் இருப்பவர்கள் எப்படி தெரிந்து கொள்ள முடியும்? இதோ பார், அனைவரும் பார்க்கும்படி இந்த பொதிகை மலையையே சிவனின் அருளால் யாழ் மீட்டி உருக வைக்கிறேன் என்றார் அகத்தியர். அக்ததியர் யாழை மீட்டினார். அவர் யாழை வாசிக்க, வாசிக்க பொதிகை மலை உருகியது. இதைக்கண்ட எல்லோரும் திகைப்படைந்தார்கள். ராவணன் வியப்படைந்தான். கல்லும் கரையும் அளவிற்கு ராவணன் யாழ் இசையைப் பழகவில்லை. ஆகவே வெட்கித் தலைகுனிந்தான். முனிவர் பெருமானே! நான் தோற்றுவிட்டேன். இந்த நாட்டை வெற்றி கொள்வது எளிதல்ல என்பதற்கு தாங்களும், தங்கள் இசையும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறியபடி தலைபணிந்து வணங்கினான். அவனது கர்வம் அடங்கியது.

திங்கள்கிழமை


Sonntag, 11. Januar 2015

கொடுமை

தன் மனைவியைக் காணாத வேதியர் மிகுந்த துக்கத்திற்கு உள்ளானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர்கள் இருவரும் காசிக்கு புனித யாத்திரை சென்று கொண்டிருந்தனர். ஒரு நாள் இரவில் ஒரு மண்டபத்தில் படுத்திருந்த போது, அவரது மனைவியை ஒரு நீசன் கடத்தி சென்று விட்டான். தூக்கத்தில் இருந்த அவளது வாயைப்பொத்தி தூக்கிச்சென்றதால் வேதியருக்கு அவள் கடத்தப்பட்டது தெரியவில்லை. அவரது துயரத்தைப்பார்த்த ஒரு முதியவர்,தொலைந்த பொருள் பற்றி மனிதன் எப்போதுமே கவலைப்படக்கூடாது. அதனால் ஆகப்போவது ஏதுமில்லை. நீ தொடர்ந்து புனித யாத்திரை செல், என அறிவுறுத்தினார்.  வேதியரும் வேறு வழியின்றி தன் பயணத்தை தொடர்ந்தார். காசிக்கு சென்று சிறிது காலம் தங்கியிருந்தார். மீண்டும் ஊர் திரும்பும் வழியில், தன் மனைவியை தொலைத்த அதே மண்டபத்தில் தங்கினார். பழைய நினைவுகள் அவரை வாட்டின.
இந்த நேரத்தில் அலங்கோலமான நிலையில் ஒரு பெண் அவரது கால்களில் வந்து விழுந்து அழுதாள்.  நீ யாரம்மா? என விசாரித்த வேதியரிடம்,என்னை உங்களுக்கு தெரியவில்லையா? நான் தான் உங்கள் மனைவி. ஒரு கொடூரக்காரனால் நான் கடத்தப்பட்டடேன். அவன் எனக்கு பல கொடுமைகள் செய்தான். என்னை சிறையில் அடைத்தான். என்னை தவறான செயலுக்கு வற்புறுத்தினான். நான் இணங்காததால் என் முகத்தில் சூடு போட்டு இப்படி ஆக்கி விட்டான். என்னைப்பற்றி சந்தேகம் கொள்ளாதீர்கள். ஊருக்கு அழைத்துச்செல்லுங்கள். உங்கள் மனைவியாக என்னை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வேலைக்காரியாக வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள், என கதறினாள். தன் மனைவியின் நிலைமையை எண்ணி அவர் மிகவும் வருந்தினார். மனைவிக்கு நடந்த கொடுமைக்கு பரிகாரம் தேடி பூரியிலுள்ள ஜகந்நாத பண்டிதர் என்ற ராம பக்தரின் வீட்டிற்கு ஆலோசனை கேட்க சென்றார். நடந்ததை கூறினார்.  அந்த மகான் சிறிதும் தயக்கமின்றி,ராம ராம ராம என மும்முறை சொல்லி தீர்த்தம் தெளித்து அவளை உன் மனைவியாகவே மீண்டும் ஏற்றுக்கொள், என கூறினார். 



அப்போது அந்த மகானின் தாயார் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தார். நன்றாக இருக்கிறதப்பா நீ சொல்லும் யோசனை. ராம என்ற நாமத்தை மூன்று முறை சொல்ல சொல்கிறாயே. அதை ஒரு தரம் சொன்னாலே போதுமே. ராம நாமத்தின் மகிமை பற்றி உனக்கு இவ்வளவு தான் தெரியுமா? என கடிந்து கொண்டார்.  தாயும் மகனும் கூறியதைக்கேட்ட வேதியருக்கு நிம்மதியும் திருப்தியும் ஏற்பட்டது. அதே நேரம் ஊரார் என்ன சொல்வார்களோ என்ற பயமும் இருந்தது. இதை ஜகந்நாத பண்டிதர் முகக்குறிப்பின் மூலமே உணர்ந்து கொண்டார். வேதியரின் பயத்தை போக்கும் வகையில் அவரது மனைவியை அருகிலுள்ள குளத்தில் ராம என்ற நாமம் சொல்லி மூழ்கி எழுமாறு சொன்னார். இதற்குள் இந்த தகவல் எப்படியோ ஊரில் பரவி விட்டது. ஊர் மக்கள் குளத்தின் முன்னால் கூடினர். வேதியரும் அவரது மனைவியும் ராமா என உரக்க தியானித்தவாறு குளத்து நீரில் மூழ்கி எழுந்தனர். மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அந்த பெண்ணின் முகத்திலிருந்த தீக்காயங்கள் மாறி மஞ்சளும் குங்குமமும் நிறைந்து முன்பை விட அழகாக இருந்தது. ஸ்ரீராமனின் மகிமையை அவ்வூரார் புரிந்து கொண்டனர். ராம ராம என்ற கோஷம் எங்கும் எழுந்தது.

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 10. Januar 2015

சீடர்

புத்தருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். ஆனால், அவர் தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்வார். தனக்கு நெருக்கமாக யாரையும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், அவருக்கு வயதான பிறகு, வேலை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, தன்னைக்கவனித்துக் கொள்ள சீடர் ஒருவரைத் தன்னருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சீடர்களே! நான் எனக்கு நெருக்கமாக ஒரு சீடரை வைத்துக் கொள்ள விரும்புகிறேன். உங்களில் ராவது முன் வருகிறீர்களா? எனக் கேட்டார். புத்தருக்கு ஏவல் புரிய சீடர்கள் காத்துக் கிடந்தனர். குறிப்பாக சாரிபுத்திரதேவர் என்ற சீடருக்கு புத்தர் என்றால் உயிர். அவர் முதல் ஆளாக எழுந்து நின்றார்.புத்தர் அவரை அமரச்சொல்லி விட்டார். எல்லாருக்கும் ஆச்சரியம். ஏன் அவரை புத்தர் சீடராக ஏற்றுக்கொள்ள வில்லை என்று குழம்பினர். எனவே, நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு வரிசையாய் எழுந்தனர்.
யாரையும் புத்தர் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அவரது பார்வை மட்டும் ஒரு சீடரின் மீது பதிந்திருந்தது. அந்த சீடர் இங்கு நடந்த எதிலுமே கலந்து கொள்ள விரும்பாதது போல், அமைதியாய் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். இதைக் கவனித்த சீடர்கள், ஆனந்தா! உன்னைத்தான் பகவான் புத்தர் தன் ஆத்ம சீடராக ஏற்றுக்கொள்ள இருக்கிறார் என்பது அவரது பார்வையில் இருந்தே புரிகிறது. நீ அதற்கு சம்மதம் சொல், என்றனர். ஆனந்தர் என்ற அந்த சீடர் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. அமைதியாய் இருந்தார். புத்தர் அவரிடம், ஆனந்த தீர்த்தரே! தங்களை பலரும் என் அந்தரங்க சீடராகச் சொல்லியும், தாங்கள் அதை ஏற்க மறுப்பதேன்? என்றார். இப்போது ஆனந்ததீர்த்தர் புத்தரின் முன்னால் வந்தார். பகவானே! தங்களுக்கு அந்தரங்க சீடராக வேண்டுமென்றால், நான் விதிக்கும் நிபந்தனைகளுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும், என்றார். மற்ற சீடர்கள் அதிர்ந்தனர்.


பகவானுக்கே இவன் நிபந்தனை விதிக்கிறானே! இவனை பகவான் விரட்டத்தான் போகிறார், என நினைத்தனர். ஆனால், கருணைக்கடலான புத்தர் அவரை அருகில் அமர வைத்தார். ஆனந்தரே! உங்கள் நிபந்தனையைச் சொல்லுங்கள், என்றார். பகவானே! உங்களுக்கு யாராவது நல்ல உணவைக் கொடுத்தால், அதில் எனக்கு பங்கு தரக் கூடாது. நல்ல ஆடைகள் கிடைத்தால், அதையும் தரக்கூடாது. தாங்கள் உடுத்திக் கிழிந்த கந்தலாடை போதும். உங்களுக்கு ஆசனம் அளிக்கப்பட்டால், அதில் என்னை அமரச் சொல்லக்கூடாது. நான் தடுமாறும் வேளையில், என்னைத் தாங்கள் தான் நல்வழிப்படுத்த வேண்டும், என்றார். இப்படி ஒரு நல்லவரா என நெகிழ்ந்து போன புத்தர் அவரையே தன் அந்தரங்க சீடராக ஏற்றார்.

சனிக்கிழமை


Freitag, 9. Januar 2015

பாவம்-1

சிவபுரி என்ற ஊருக்கு சந்நியாசி ஒருவர் வந்தார். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். இரவில் கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் படுத்துக்கொண்டார். அவ்வூரை விட்டுச் செல்ல எண்ணம் இல்லாத அவர் பகலில் கோயிலுக்கு செல்வதும், இரவில் அந்த திண்ணையில் படுப்பதுமாக பொழுதைக் கழித்தார். ஒரு சமயம், அந்த திண்ணைக்கு எதிரே இருந்த வீட்டிற்கு தொடர்ந்து பல ஆண்கள் சென்று திரும்புவதை கண்டார். அன்று முதல் எதிர்வீட்டின் மேலேயே கவனம் செலுத்தினார். அது ஒரு விலைமாதுவின் வீடு. அவள் வீட்டிற்கு யார் வருகிறார்கள்? வருபவர்கள் பணக்காரர்களா? திருமணமானவர்களா? எவ்வளவு நேரம் தங்குகிறார்கள்? என்பதிலேயே அவரது முழு கவனமும் இருந்தது.அவர், யதார்த்தமாக விலைமாதுவின் வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு கல் என தன் பக்கத்தில் கற்களை போட்டுக்கொண்டே வந்தார். நாட்கள் சென்றன.

அவர் போட்ட கற்கள் குன்றுபோல குவிந்து விட்டது. நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியேறாத விலைமாது, ஒருநாள் வெளியே வந்தாள். தன் வீட்டின் எதிரே இருந்த சந்நியாசியையும், புதிதாக இருந்த கல்குன்றையும் பார்த்தாள். அவரிடம் சென்று கல்குன்றை பற்றி கேட்டாள். விபரத்தை கூறினார் சந்நியாசி.  அதைக்கேட்ட விலைமகள் மிகவும் வேதனை கொண்டாள். மனம் திருந்தினாள். தன்னிடமிருந்த சொத்துக்களையும், விலையுயர்ந்த ஆபரணங்களையும் ஏழைகளுக்கு கொடுத்தாள். தனது வீட்டை அன்ன சத்திரமாக்கினாள். அங்கு வருபவர்களுக்கு எந்நேரத்திலும் குறைவிலாத உணவு கிடைக்கும்படி செய்தாள். அவ்வூரை விட்டு வெளியேறி பல புண்ணியதலங்களுக்கும் சென்றாள். கூலி வேலை செய்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தர்மசெயல்களுக்கு செலவிட்டு மீதியில் உண்டு வாழ்ந்தாள். இதனிடையே, சிவபுரியில் இருந்த சந்நியாசி எப்போதும் விலை மாதுவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்.  அவள் ஏன் இவ்விடத்தை விட்டு சென்றாள். வேறு ஊரில் தொழில் செய்வாளோ? என தனக்குள் பல கேள்விகள் கேட்டுக் கொண்டார். அவளை தேடி ஊர், ஊராகவும் செல்ல ஆரம்பித்துவிட்டார்.


இப்படியே காலம் ஓடியது. ஒரேநாளில் விலைமாதுவும், சந்நியாசியும் இறப்பை தழுவினர். விலைமாதுவை, தேவர்கள் புஷ்பகவிமானத்தில் சொர்க்கலோகத்திற்கு அழைத்துச்சென்றனர். சந்நியாசியை எமதூதர்கள் இழுத்து சென்றனர். வழியில் விலைமாதுவை கண்டார் சந்நியாசி. அதிர்ந்த அவர் எமதூதர்களிடம் சந்நியாசியான என்னை நீங்கள் இழுத்து செல்கிறீர்கள்?, விலை மாதுவோ புஷ்பக விமானத்தில் செல்கிறாள். என்ன கொடுமை இது? என்று கேட்டார்.  நீர் சந்நியாசியாக இருந்தும் எப்போதும் இந்தப் பெண்ணைப் பற்றியும், அவளது தொழில் பற்றியுமே எண்ணிக்கொண்டிருந்தீர். ஆனால், அவளோ தான் செய்த பாவத்திற்கு நன்மைகள் செய்து விமோசனம் தேடிக்கொண்டாள். எனவே தான் அவளுக்கு இப்புண்ணிய நிலை கிடைத்தது என்றனர். சந்நியாசி தலை குனிந்த படியே நரகத்திற்குள் புகுந்தார்.

வெள்ளிக்கிழமை


Donnerstag, 8. Januar 2015

சாபம்

பாரதயுத்தம் முடிந்ததும் கடைசியாக இறந்த துரியோதனனையும் சேர்த்து, தான் பெற்ற நூறு பிள்ளைகளையும் இழந்தாள் காந்தாரி. பெற்ற அவள் வயிறு எரிந்தது. நேராக கண்ணனிடம் வந்தாள். ஏ கண்ணா! என் மகன்களைக் கொன்றது பாண்டவர்கள் அல்ல. நீ தான். உன் ஆலோசனையின்றி, அவர்கள் என் மக்களை ஜெயித்திருக்க முடியாது. பல விஷயங்களிலும் அவர்களுக்கு உதவி, என் மக்களைக் கொன்ற கொலைகாரனாக என் முன்னால் நிற்கிறாய். நீ தெய்வபுருஷன். ஆனால், அதற்குரிய எல்லா இலக்கணங்களையும் மறந்து, என் மக்களைக் கொன்றாய். ஒரு சாராருக்கு ஆதரவாக நின்றாய். என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டாய். நான் எப்படி என் மக்களை இழந்து துன்புறுகிறேனோ, அதுபோல் நீ பெற்ற பிள்ளைகளையும், துவாரகாவில் வசிக்கும் உன் மக்களும் மாண்டு அழிவார்கள். அப்போது உன் வயிறும் என் வயிறு போல் எரியும், என சாபமிட்டாள். அவள் பத்தினி. பெற்ற பிள்ளைகள் தான் தவறான பாதையில் போனார்களே தவிர, கணவனுக்காக கண்ணையே கட்டிக் கொண்ட உத்தமி. அப்படிப்பட்டவளின் சாபம் தன்னை என்றாவது சாய்த்து விடும் என்பதில் கிருஷ்ணன் நம்பிக்கை கொண்டிருந்தார். அதற்கேற்ற சமயமும் வந்தது.

கன்வர் (சகுந்தலையின் தந்தை), விஸ்வாமித்திரர், நாரதர் ஆகிய ரிஷிகள் ஒருமுறை கண்ணனைக் காண துவாரகாபுரிக்கு வந்தார்கள். பொதுவாக சாமியார்களைப் பார்த்தால் யாருக்கும் இளக்காரமாகத்தான் இருக்கும். அவர்களை சாதாரணமாகக் கருதிய அவ்வூர் மக்கள் சிலர், கண்ணனின் மகனான சாம்பன் என்பவனுக்கு பெண் வேடமிட்டு, வயிற்றில் ஒரு தலையணையை வைத்துக் கட்டி, அந்த முனிவர்கள் முன்னிலையில் நிறுத்தினர். முனிவர்களே! எங்கள் நகருக்கு வந்திருக்கும் தங்கள் வரவு நல்வரவாகட்டும். நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானிகள். இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்? என்று அவர்களையே ஏமாற்றப் பார்த்தனர். அட கயவர்களே! எங்கள் பெருமையை மாசுபடுத்தும் விதத்திலா கேள்வி கேட்டீர்கள். இவன் சாம்பன் என்பது எங்களுக்கு தெரியும். ஒரு உலக்கை இவன் வயிற்றில் பிறக்கும். அது உங்கள்  வம்சத்தையே அழிக்கும், என சாபமிட்டனர். பயந்து போனார்கள் அவர்கள். ஆனாலும், சாபப்படி உலக்கை பிறந்தது. அதை அரத்தால் அறுத்து பொடியாக்கினர். உலக்கையின் இரும்பு உருண்டையையும் சேர்த்து கடலில் போட்டு விட்டனர். தங்களை இனி உலக்கை ஏதும் செய்யாதென நினைத்தனர்.


அந்த இரும்பு உருண்டையை ஒரு மீன் விழுங்கியது. அம்மீனைப் பிடித்தவர்கள் இரும்புத்துண்டை வீசி விட்டனர். அதை கண்டெடுத்த ஒரு வேடன் அதை தன் வில்லில் வைத்து கட்டிக் கொண்டான். ஒருமுறை மான் என நினைத்து, தன் இரும்பு உருண்டையை அதன் மீது வீச, அது அவ்வழியே வந்த கண்ணன் மீது பட்டது. வேடன் பயத்துடன் மன்னிப்பு கேட்டான்.

கண்ணன் அவனுக்கு முக்தியளித்தார். அத்துடன் இரும்பு உருண்டை வலி தாளாமல் இறந்தார். தன் மனித அவதாரம் முடித்த திருப்தியில் வைகுந்தம் சென்றார். ஐந்து லட்சம் யாதவர்கள் போதைக்கு அடிமையாகி தங்களுக்குள் அடித்துக் கொண்டு இறந்தனர்.  பத்தினியின் சாபமும், முனிவர்களின் சாபமும் பலித்தது.

வியாழக்கிழமை


Mittwoch, 7. Januar 2015

ஆசை-2

தமொரசாமி ராகத்துடன் ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அவரது கொள்ளுப்பேரன் சோமு அவரருகே வந்தான். பெரிய தாத்தா! நீங்க இப்போ ஒரு பாட்டு படிச்சீங்களே! அதை திரும்பவும் பாடுங்க! ஜோரா இருந்துச்சே, என்றான். தாத்தாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தனது பாட்டையும் ரசிக்க ஒரு ரசிகன் வந்துவிட்டானே என்ற மகிழ்ச்சியில் பாட ஆரம்பித்தார். நந்த வனத்திலோர் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி சங்கர சங்கர சம்போசிவ சங்கர சங்கர சங்கர சம்போ....இப்படியாக அவர் பாடி முடிக்கவும், சோமு அவரிடம், அதெல்லாம் சரி தாத்தா...இந்த பாட்டுக்கு எனக்கு அர்த்தம் புரியலையே, என்றான். பெரியவர் சொன்னார். சோமு! இதில் பெரிய தத்துவமே அடங்கியிருக்கிறது. ஒரு கதை சொல்றேன் கேட்கிறியா, என்றார். சோமு ஆர்வத்துடன் காதை தீட்டினான். ஒரு கிராமத்துக்கு ஒரு பரதேசி வந்தார். அவர் வீடு வீடாகப் போய் பிச்சை கேட்பார்.

ஒருநாள் ஒரு வீட்டின் பெண்மணி, ஏம்ப்பா...உனக்கு கை காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு. உழைச்சு சாப்பிட்டா என்னவாம்? என்று கடுமையாகப் பேசி விட்டாள். பரதேசிக்கு வருத்தம். அவருக்கு ரோஷம் வந்து விட்டது. தன்னைத் திட்டிய அந்த ஊரார் முன், தான் ஒரு கடும் உழைப்பாளி என்பதைக் காட்ட ஒரு காலியிடத்தில் பூந்தோட்டம் போட்டார். கோயில்கள் மிகுந்த அந்த ஊரில் பூக்களை விற்று சம்பாதிக்கலாம் என கணக்கு போட்டார். ஆங்காங்கே கிடந்த பூங்குச்சிகளை ஒடித்து குழி தோண்டி நட்டார். அருகிலேயே ஒரு கால்வாய் ஓடியது. அதில் இருந்து தண்ணீர் எடுத்து, செடிகளில் ஊற்ற குடம் இல்லை. ஒரு குயவனிடம் சென்று, எனக்கு இலவசமாக ஒரு குடம் தா. என் தோட்டத்து பூக்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நான் பரதேசி. காசு இல்லை, என்றார். இவர் பரதேசி என்றால், அவன் வடிகட்டிய கஞ்சன். இருந்தாலும் இல்லை என சொல்லாமல் அப்போதைக்கு தட்டிக் கழிப்பதற்காக, நாளை வாரும், குடம் தருகிறேன், என சொல்லி அனுப்பிவிட்டான். அவர் அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக அங்கு போய் நின்றார். அன்றும் நாளை வாரும், குடம் தயாராகவில்லை, என சொல்லி அனுப்பி விட்டான். மறுநாளும் போனார். இப்படியே பலநாள் போனார்.


பத்து மாதங்களாக தொடர்ந்து ஒரே பதிலே கிடைத்தது. அதுவரை தென்னை மட்டையில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றியும், கொட்டாங்கச்சிகளில் தண்ணீர் எடுத்தும், தன் மேல் துண்டை தண்ணீரில் நனைத்து அதைக் கொண்டு வந்து பிழிந்தும் செடிகளை ஓரளவு காப்பாற்றி வைத்திருந்தார் பரதேசி. ஒருநாள் பரதேசியின் தொல்லை தாங்காமல் ஒரு மண்குடத்தை கொடுத்துவிட்டான். பரதேசிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தன் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார். தற்செயலாக கை நழுவ குடம் கீழே விழுந்து உடைந்தது. வருத்தத்துடன் தோட்டத்துக்கு திரும்பிய பரதேசி ஒரு சித்தரைப் பார்த்தார். நடந்ததைச் சொன்னார். சித்தர் அவரிடம், ஒவ்வொரு மனிதனும் பத்துமாதம் தாயின் கருவில் இருந்து, பிறக்கும் போது பரதேசியாக ஆடை கூட இல்லாமல் தான் வருகிறான்.  இங்கே வந்ததும் பாட்டு, கூத்து, செல்வம், ஆடை, அணிகலன் என்ற மாயைக்குள் சிக்கி, ஆடாத ஆட்டம் ஆடுகிறான். உயிர் பிரிந்ததும், நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த குடத்தை கீழே போட்டு உடைத்தது போல, எல்லாவற்றையும் இழந்து, அதே நிர்வாணத்துடன் வந்த இடம் திரும்புகிறான், என்றார். பரதேசி வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து கொண்டு, மீண்டும் ஆசைகளைத் துறந்து தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.

புதன்கிழமை


Dienstag, 6. Januar 2015

மந்திரம்

சாமி! குழந்தைக்கு உடம்பு சரியில்லே. வைத்தியரிடம் காட்டி, எவ்வவளவோ மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்து பாத்துட்டேன். இன்னும் சரிவரலே. நீங்கதான் ஏதாச்சும் மந்திரம் சொல்லி குழந்தையைக் காப்பாத்தணும், என்றாள் குழந்தையைக் கொண்டு வந்த ஒரு தாய். அது ஒரு ஆஸ்ரமம். தீராத வியாதியுள்ள குழந்தைகளை இங்குள்ள சாமியாரிடம் காட்டி மந்திரம் சொல்லி நோய் போக்க வேண்டுவர் அப்பகுதி மக்கள். சாமியாரும் மனதுக்குள் ஏதோ மந்திரம் சொல்லி, தீர்த்தம் கொடுப்பார். குழந்தைகளுக்கு நோய் போகும். இந்தப் பெண் வந்த சமயத்தில் தலைமை குரு இல்லை. சில சிஷ்யர்கள் தான் இருந்தனர். அதில் ஒரு சீடர், தாயே! வீட்டுக்குப் போய், ஒரு குவளை தண்ணீர் எடுத்து, அதில் கையை வச்சு ராமநாமத்தை மூன்று முறை சொல்லி, தீர்த்தத்தை குழந்தைக்கு கொடு, சரியாயிடும், என்றார். அப்பெண்ணும் அவ்வாறே செய்ய குழந்தை கண்விழித்தது. அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
குழந்தை வழக்கம்போல் துருதுருவென விளையாடி மகிழ்ந்தது. மறுநாள் அந்த தாய் சாமியாருக்கு நன்றி சொல்ல வந்தாள்.  சுவாமி, தங்கள் சீடர் சொன்னபடியே ராமநாமத்தை மூன்று தடவை சொல்லி தீர்த்தம் கொடுத்தேன்.  ராமநாமத்தின் மகிமையால் குழந்தை பிழைத்தது. நான் தங்களுக்கு மிகவும் நன்றி கடன்பட்டுள்ளேன்  என்றாள். சாமியார் அவளை அனுப்பி விட்டார். அவருக்கு கடும் கோபம். சீடனை அழைத்தார். முட்டாளே! நானில்லாத நேரத்தில் ராமநாமத்தின் மகிமையை குறைத்திருக்கிறாய். இந்தா பிடி! இந்தக் கல்லை எடுத்துக் கொண்டு போய், இதன் விலை என்ன என்று கேட்டு வா, எனச்சொல்லி அனுப்பி விட்டார். அவர் அந்தக்கல்லுடன், ஒரு மளிகைக்கடைக்கு போனார். கடைக்காரர் அதைப் பார்த்து விட்டு, என்னிடம் இருந்த எடைக்கல் தொலைந்து விட்டது. அதற்கு பதில் இதைப் பயன்படுத்திக் கொள்வேன். வேண்டுமானால் ஒரு ரூபாய் தருகிறேன், என்றார். சீடர் ஒரு நகைக்கடைக்குச் சென்றான்.


அவர்கள் அதை பரிசோதித்து விட்டு, ஆ...இது விலை உயர்ந்த கல். இதைப் போன்ற அபூர்வக்கல் கிடைப்பது எளிது. தருகிறீரா..ஒரு லட்சத்துக்கு, என்றனர். பின்னர் அவர் அரண்மனைக்கு போய், ராஜாவிடம் காட்டினார். ராஜா தன் ஆஸ்தான சிற்பிகளை வரவழைத்துக் காட்ட, இது ஒரு கோடி பெறுமே. இது போன்ற கல் கிடைப்பது அதிசயம், என்றனர். ராஜா அதை விலைக்கு கேட்டார். குருநாதரிடம் கேட்டு வருவதாகச் சொல்லி விட்டு திரும்பிய சீடர், நடந்ததை குருவிடம் சொன்னார். சீடனே! இக்கல் நீ கேட்ட இடத்தில் எல்லாம் ஏதோ ஒரு மதிப்பை உன்னிடம் கூறினர். ஆனால், அவர்கள் சொன்னதை விட இது விலை உயர்ந்தது. இதோ பார், என்றவர், சில இரும்புத்துண்டுகளை எடுத்து அதன் மீது கல்லை வைத்தார். இரும்பு தங்கமாக மாறிவிட்டது. பார்த்தாயா! இது ஸ்வர்ணமணி என்னும் அபூர்வக்கல். இரும்பை தங்கமாக்கும் சக்தி கொண்டது. ஆனால், நீ சொன்னாயே, ராமநாமம். அது இவை எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது. அதை ஒருமுறை சொன்னாலே போதும். நீ மூன்று முறை சொல்லச் சொன்னது தவறல்ல என்றாலும், ஒருமுறை சொன்னாலே நோய்கள் தீரும் என்பதை ஆணித்தரமாகச் சொன்னால் தான் ராமநாமத்திற்கு மகிமை மேலும் அதிகரிக்கும். புரிந்ததா? என்றார். குருவின் புத்திக்கூர்மை, ராமநாமத்தின் மகிமை ஆகியவற்றை நினைத்து சீடன் பேரானந்தம் கொண்டு விக்கித்து நின்றான்.

செவ்வாய்க்கிழமை


Montag, 5. Januar 2015

நம்பிக்கை

மகந்தன் என்பவன் மிகப்பெரிய வியாபாரி. நல்ல வழியிலும், கெட்ட வழியிலுமாய் பணத்தைச் சம்பாதித்து கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருந்தான். எப்படி சம்பாதித்தாலும், யாருக்காவது தர்மம் செய்ய வேண்டும், கோயில் காரியத்துக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவனுக்கு அறவே கிடையாது. அதே நேரம் தன் சுகத்துக்காக எக்கச்சக்கமாக செலவிடுவான். வணிக விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு தன் வண்டியில் செல்வான். செல்லும் வழியில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அக்கோயிலில் தவறாமல் வழிபடுவான். பிரார்த்திக்கும் போது, பிள்ளையாரே! நான் உனக்கு மாதம்தோறும் நூறு தேங்காய் உடைக்கிறேன். ஆனால், எனக்கு நீ மாதம் லட்சம் பொன் வருமானம் வரச்செய்ய வேண்டும், என்று பேரம் பேசுவான். பிள்ளையார் இவனைக் கவனித்துக் கொண்டே இருந்தார். அவனுக்கு புத்தி கற்பிக்க முடிவு செய்தார். அந்த கோயில் வாசலில் ஒரு பிச்சைக்காரன் இருப்பான். அவனுக்கும் மனைவி, குழந்தைகள் உண்டு. பிள்ளையாரே! எப்பிறவியில் என்ன பாவம் செய்தேனோ, என் கை, கால்களை முடமாக்கி, பிச்சை எடுக்க வைத்து விட்டாய். இதைக் கொண்டு மனைவி, பிள்ளைகளுக்கு கொடுத்து, நானும் சாப்பிட போதவில்லையப்பா! என் பாவங்களை மன்னித்து எனக்கு நல்வழி காட்டு, என கண்ணீர் விட்டு பிரார்த்திப்பான்.

ஏழையின் கண்ணீர் விநாயகரின் நெஞ்சைக் கரைத்தது. ஒருநாள் வியாபாரி கோயிலுக்கு வந்தான். அப்போது அவன் காதில் மட்டும விழும்படியாக ஒரு அசரிரீ குரல் ஒலித்தது. நான் தான் பிள்ளையார் பேசுகிறேன். அதோ, இருக்கிறானே, பிச்சைக்காரன். அவனுக்கு இன்று மாலைக்குள் ஒராயிரம் பொற்காசு கிடைக்கப் போகிறது, என்றது அக்குரல். வியாபாரிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அந்த பிச்சைக்காரனுக்கு கிடைக்கும் பொற்காசுகள் அனைத்தையும் பறிக்க திட்டமிட்டான். வேகமாக பிச்சைக்காரனிடம் போய், ஏனப்பா! உனக்கு எல்லாரும் சாதாரண நாணயங்களைப் போடுகிறார்கள். நான் ஒரு தங்கக்காசு தருகிறேன். ஆனால், இன்று மாலை வரை உனக்கு கிடைக்கும் வருமானத்தை எனக்கு தந்து விட வேண்டும், என்றான். பிச்சைக்காரனுக்கு சந்தோஷம். மாலை வரை பார்த்தாலும், ஒரு பிடி அரிசி வாங்கக்கூட தேறாத அளவுக்கு சில்லறைகள் தான் இதில் விழும். இவனோ தங்கமே தருகிறேன் என்கிறான். ஆஹா...இதைக் கொண்டு ஒரு மாதம் சுகமாக வாழலாம், என கற்பனையில் ஆழ்ந்தான். மாலையும் நெருங்கியது. யாரும் பிச்சைக்காரன் தட்டில் ஆயிரம் பொற்காசைப் போடவில்லை. அவனுக்கு கோபம் வந்து விட்டது.


பிள்ளையார் அருகில் போனான். ஏ, பிள்ளையாரே! பொய்யா சொல்கிறாய். என்னை ஏமாற்றி விட்டாயே, எனக்கூறி அவர் முகத்தில் ஓங்கி அடித்தான். பிள்ளையார் தன் தும்பிக்கையால் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தார். இது மற்றவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. அவன் வலி தாளாமல் அழுததைப் பார்த்து, வியாபாரி பக்தி முற்றி, தன் கஷ்டத்தை அழுது கொண்டே பிள்ளையாரிடம் சொல்வதாக நினைத்துக் கொண்டனர். பிள்ளையார் அவனிடம், நீ உடனே ஆயிரம் பொன்னை அந்த பிச்சைக்காரனுக்கு கொடு. இல்லாவிட்டால் உன்னை இப்படியே கொன்றுவிடுவேன், என்றார். மனமில்லாவிட்டாலும், உயிரைக் காப்பதற்காக, அவன், அங்கிருந்த பக்தர்கள் மூலம் தன் மனைவியை பொற்காசுகளுடன் வரும்படி சொல்லி அனுப்பினான். அவளும் காசுடன் வந்தாள். பிச்சைக்காரனுக்கு அதைப் போடும்படி சொன்னான். அவளும் போட்டாள். விநாயகர் பிடியை விட்டார்

திங்கள்கிழமை


Sonntag, 4. Januar 2015

சந்தேகம்

ஒரு சமயம் இந்திராதி தேவர்களுக்குள் ஒரு சந்தேகம் உண்டாயிற்று பக்தர்களில் யார் சிறந்தவர் என்று இறைவன் கருதுகிறார் என்பதே அது. எல்லாரும் பிரம்மதேவரின் தலைமையில் விஷ்ணுவைச் சந்திக்கச் சென்றனர். மகாவிஷ்ணு சொன்னார், பூவுலகில் மிகச்சிறந்த பக்தன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் நந்திதேவன். அவனை விடச் சிறந்த பக்தனை நான் இதுவரை கண்டதே இல்லை, என்றார். அவன் எங்கிருக்கிறான் பிரபுவே? என்றான் இந்திரன். அவன் பூமண்டலத்தை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தவன். இப்போது ராஜ்யத்தை துறந்து என்னருள் பெறுவதற்காக கடுமையான உபவாசம் மேற்கொண்டுள்ளான். அந்த உபவாசம் கூட இன்று முடிகிறது. நான் அவனுக்கு அருள் செய்ய கிளம்பிக் கொண்டிருக்கிறேன், என்றார் விஷ்ணு. பிரபு! சற்று பொறுங்கள். தங்கள் அனுமதியுடன் அவனை சோதித்து பார்க்க விரும்புகிறோம், என்றனர் இந்திராதி தேவர்கள். விஷ்ணு ஏதும் சொல்லவில்லை. பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, பாம்பணையில் துயில் கொண்டு விட்டார். பிரம்மாவின் தலைமையில் அக்கோஷ்டியினர் நந்திதேவனின் இருப்பிடத்தை அடைந்தனர்.
ஒரு திட்டம் வகுத்தனர். வாயு அக்னியிடம், அடேய் அக்னி! ஒருவனுக்கு பசி வந்திட பத்தும் பறந்திடும். இன்று உபவாசம் முடியும் வேளை. பயல் பட்டினியாய் கிடப்பான். உபவாசம் முடிந்து உணவு உண்ண போகும் போது, அதை நாம் மாறுவேடத்தில் போய் கேட்போம். அவன் திண்டாடிப் போவான். உணவு தர மாட்டான். அவனது யோக்கியதை வெளிப்பட்டு விடும், என்றான். இருவரும் புறப்பட்டனர் சந்நியாசி வேடத்தில். நந்திதேவன் உபவாசம் முடித்து அசதியுடன் சமைத்தும் செய்து முடித்தான். நீராடி விட்டு, இலையைப் போட்டான். சந்நியாசிகள் வந்து விட்டனர். தம்பி! நாங்கள் நீண்ட நேரம் நடந்து பசியோடு வந்துள்ளோம். ஏதாவது இருந்தால் கொடப்பா, என்றனர். நந்திதேவன் புன்னகைத்தான். சரியான சமயத்தில் வந்தீர்கள். உபவாசம் முடிப்பவன், உணவை பிறருக்கு அளித்து விட்டு சாப்பிட வேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி போலும். இதோ சாப்பிடுங்கள், என தனக்கு சமைத்த உணவை அவர்களுக்கு கொடுத்தான். அவர்கள் வாங்கிச் சென்றனர். அவர்கள் சென்றதும், தன் கமண்டலத்தில் இருந்த தண்ணீரைக் குடிக்க எடுத்த போது, ஐயா சாமி! தாகமா இருக்கு. ஒரு குவளை தண்ணீர் இருந்தால் கொடுங்களேன், என்று வந்து நின்றான் பிச்சைக்கார வடிவில் வந்த இந்திரன்.

நந்திதேவன் கமண்டலத்தை எடுத்து அவனிடம் கொடுத்து, ஐயா! தங்கள் தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள், என்றான். பிச்சைக்கார வடிவில் வந்தவன், ஐயா தாங்கள் பெரிய தபஸ்வி. நானோ பிச்சையெடுப்பவன். கையெல்லாம் புண்கள். ரத்தம் கொட்டுகிறது. என் கைகள் இந்த புனிதமான கமண்டலம் மீது படலாமா? இன்னொரு விஷயம். நான் தாழ்ந்த குலத்தினன் வேறு, என்றான் அழுதபடியே. அவனை நந்திதேவன் அணைத்துக் கொண்டான். பச்சிலைகளைப் பறித்து வந்து புண்களுக்கு அரைத்து போட்டு ஒரு துணியால் கட்டினான். ஐயா! வியாதி எல்லா மனிதருக்கும் பொதுவானது. மனிதர்களில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்றில்லை. எல்லாரும் ஒன்றே, தாங்கள் தண்ணீர் அருந்துங்கள், என்றான். இந்திரன் தன் சுய உருவை எட்ட, முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கே வர, பெருமாளும் அங்கே பிரசன்னமானார். அனைவரும் நந்திதேவனை வாழ்த்தினர்.

ஞாயிற்றுக்கிழமை


Samstag, 3. Januar 2015

அம்மா

விநாயகப் பெருமான் தான் வளர்த்த பூனை ஒன்றுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கை நகம் பட்டு பூனையின் முகத்தில் கீறல் விழுந்து விட்டது. பூனை வலிதாங்காமல் ஓரிடத்தில் படுத்துக் கொண்டது. வலி குறைந்ததும் வழக்கம் போல் விளையாடியது. விநாயகரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.சற்றுநேரம் கழித்து வீட்டுக்கு போனார். அம்மா பார்வதியின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தார். மகனின் தும்பிக்கையை தடவி விட்டுக் கொண்டிருந்தாள் பார்வதி. அந்த சுகத்திலேயே கண்கள் செருக, அப்படியே மேலே பார்த்தவர், அம்மாவின் கன்னத்தில் ஒரு கீறல் இருப்பதையும், அதில் ரத்தம் ஒட்டியிருப்பதையும் பார்த்தார். பதறிப்போய் எழுந்தார். அம்மா! உன் முகத்தில் ஏதோ கீறியிருக்கிறது. ரத்தம் வந்து காய்ந்திருக்கிறது. நீ கவனிக்கவில்லையா? என்றார். தெரியும் மகனே! நீ தூங்கு என்றாள் பார்வதி. அம்மா விளையாடாதே. யார் உன் முகத்தில் இப்படி கீறினார்கள். தம்பி முருகன் வேல் கொண்டு விளையாடும் போது அது முகத்தில் பட்டதா? அல்லது அப்பா தன் சூலத்தை அசைக்கும் போது பட்டதா? அல்லது நீயாகவே ஏதும் செய்தாயா? என படபடத்தார். பார்வதி சிரித்தாள். நீயாகவே என் முகத்தில் கீறிவிட்டு, இத்தனை பேரை சந்தேகப்படுகிறாயே? என்றாள். விநாயகர் அரண்டு விட்டார். அம்மா! நான் ஏதும் செய்யவில்லையே. ஒருவேளை உன் மடியில் வந்து படுக்கும் போது என் கிரீட நுனி குத்திவிட்டதோ? என்றார். இல்லையப்பா! நீ பூனையுடன் விளையாடும் போது, அதன் முகத்தில் உன் நகம் பட்டு கீறல் விழுந்ததே! அதுதான் இது., என்றாள். விநாயகர் ஆச்சரியம் தாங்காமல், பூனையின் முகத்தில் பட்ட காயம் உன் முகத்துக்கு எப்படி தாவியது? என்றார். இந்த உலக உயிர்கள் அனைத்திலும் நான் இருக்கிறேன். அவற்றிற்கு செய்யப்படும் நன்மையும், தீமையும் என்னைத் தான் சேரும், என்றாள் பார்வதி. அப்படியானால், நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. ஏனெனில், ஒரு பெண்ணைத் தொட்டால் என் தாயைத் தொட்டதாக அல்லவா ஆகும்? என்ற விநாயகர், எல்லாப் பெண்களையும் தன் தாயாகவே பார்க்கிறார்.

சனிக்கிழமை


Freitag, 2. Januar 2015

ஆசை-1

ராவண வதத்திற்கு பிறகு விபீஷணன் இலங்கையின் அரசனானான். அவனது விருப்பப்படி அயோத்தியில் இருந்த ரங்கநாதர் சிலையை ராமன் பரிசளித்தார். அதைப் பெற்றுக் கொண்டு, இலங்கையில் பிரதிஷ்டை செய்ய வரும் போது, அகத்தியரின் விருப்பப்படி, ரங்கநாதரை ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடு செய்து விட்டார் விநாயகர்.ரங்கநாதரைப் பிரிந்த விபீஷணன் நாட்டுக்கு போய் கவலையில் இருந்தான். அவரைத் தரிசிப்பதற்காக ஒவ்வொரு ஏகாதசியன்றும் ஸ்ரீரங்கத்திற்கு வருவான். இதை ஒரு அர்ச்சகர் கவனித்துக் கொண்டே இருந்தார். விபீஷணன் அசுரன் அல்லவா? எனவே இலங்கையில் இருந்து வரும் போது, மிகப்பெரிய கூடை ஒன்றில் பூ எடுத்து வருவான். அந்த கூடைக்குள் பத்து, இருபது ஆட்கள் அமர்ந்து கொள்ளலாம். அந்தளவுக்கு பெரிய கூடை. ஒருநாள் அர்ச்சகருக்கு ஒரு ஆசை. எப்படியாவது இலங்கைக்கு போய் அந்த நாட்டை பார்த்து விட வேண்டுமென்று. நைசாக கூடைக்குள் போய் உட்கார்ந்து கொண்டார். விபீஷணன் கூடையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான். ராட்சஷர்களுக்கு மனிதர்கள் எறும்பு மாதிரி. எனவே, கூடைக்குள் அர்ச்சகர் ஒளிந்திருந்தது விபீஷணனுக்கு தெரியாது. கொஞ்சம் பிரசாதம் மட்டும் கூடைக்குள் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். வான் வழியே சில நிமிடங்களில் இலங்கை போய் சேர்ந்தான்.

அரண்மனைக்குள் சென்று கூடையை கவிழ்த்தான். உள்ளேயிருந்து அர்ச்சகர் உருண்டு விழுந்தார். ஓய் அர்ச்சகரே! என்ன தைரியம் உமக்கு! எதற்கு இங்கு வந்தீர்? என்றான்அர்ச்சகர் இலங்கையை சுற்றிப்பார்த்து விட்டு விபீஷணனிடம் வந்தார். அரண்மனை கஜானாவுக்கு கூட்டிச் சென்றான் விபீஷணன். இங்கிருப்பதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளும் என்றான். அங்கே தங்கமும் ரத்தினமும் கொட்டிக் கிடந்தது. அர்ச்சகருக்கு ஆசையோ ஆசை.

இங்கிருப்பதிலேயே விலை மதிப்பற்ற ஒன்றைக் கொடுங்கள், என்றார். விபீஷணன் கணக்குப்பிள்ளையிடம் கண்ணைக் காட்ட, கணக்குப்பிள்ளை ஒரு சிறு டப்பாவை எடுத்து வந்து கொடுத்தார். இவர் ஆவலோடு டப்பாவைத் திறந்தார். உள்ளே ஒரு ஊசி இருந்தது. அர்ச்சகரே! இது சிறிய ஊசி தான். ஆனால், எங்கள் மகாராஜா எந்த நாட்டில் இருந்தோ இதை வாங்கி வந்தார். இதை ஒரு அரிய பொக்கிஷமாக பாதுகாத்து வந்தோம். இன்று இது உமக்குச் சொந்தம். இனி இதை என்று காண்போம்? என கண்ணீர் மல்கச் சொன்னார் கணக்குப்பிள்ளை. அர்ச்சகருக்கு ஈயாடவில்லை. மன்னன் கேட்ட போது, ஒரு கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு போயிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? அதீத ஆசை எவ்வளவு பெரிய நஷ்டத்தைக் கொண்டு வந்தது.

வெள்ளிக்கிழமை


Donnerstag, 1. Januar 2015

கோபம்

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான். அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது. அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம். மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது. அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான். அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான். பலராமர் காவல் இருந்தார். அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.

அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. பரசுராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது. பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது. மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது. அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்கஅவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது. கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது. ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர். அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. நான் சிரித்துக் கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான். கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.

வியாழக்கிழமை