Freitag, 9. Januar 2015

பாவம்-1

சிவபுரி என்ற ஊருக்கு சந்நியாசி ஒருவர் வந்தார். அங்கிருந்த சிவன் கோயில் வாசலில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். இரவில் கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் படுத்துக்கொண்டார். அவ்வூரை விட்டுச் செல்ல எண்ணம் இல்லாத அவர் பகலில் கோயிலுக்கு செல்வதும், இரவில் அந்த திண்ணையில் படுப்பதுமாக பொழுதைக் கழித்தார். ஒரு சமயம், அந்த திண்ணைக்கு எதிரே இருந்த வீட்டிற்கு தொடர்ந்து பல ஆண்கள் சென்று திரும்புவதை கண்டார். அன்று முதல் எதிர்வீட்டின் மேலேயே கவனம் செலுத்தினார். அது ஒரு விலைமாதுவின் வீடு. அவள் வீட்டிற்கு யார் வருகிறார்கள்? வருபவர்கள் பணக்காரர்களா? திருமணமானவர்களா? எவ்வளவு நேரம் தங்குகிறார்கள்? என்பதிலேயே அவரது முழு கவனமும் இருந்தது.அவர், யதார்த்தமாக விலைமாதுவின் வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு கல் என தன் பக்கத்தில் கற்களை போட்டுக்கொண்டே வந்தார். நாட்கள் சென்றன.

அவர் போட்ட கற்கள் குன்றுபோல குவிந்து விட்டது. நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியேறாத விலைமாது, ஒருநாள் வெளியே வந்தாள். தன் வீட்டின் எதிரே இருந்த சந்நியாசியையும், புதிதாக இருந்த கல்குன்றையும் பார்த்தாள். அவரிடம் சென்று கல்குன்றை பற்றி கேட்டாள். விபரத்தை கூறினார் சந்நியாசி.  அதைக்கேட்ட விலைமகள் மிகவும் வேதனை கொண்டாள். மனம் திருந்தினாள். தன்னிடமிருந்த சொத்துக்களையும், விலையுயர்ந்த ஆபரணங்களையும் ஏழைகளுக்கு கொடுத்தாள். தனது வீட்டை அன்ன சத்திரமாக்கினாள். அங்கு வருபவர்களுக்கு எந்நேரத்திலும் குறைவிலாத உணவு கிடைக்கும்படி செய்தாள். அவ்வூரை விட்டு வெளியேறி பல புண்ணியதலங்களுக்கும் சென்றாள். கூலி வேலை செய்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தை தர்மசெயல்களுக்கு செலவிட்டு மீதியில் உண்டு வாழ்ந்தாள். இதனிடையே, சிவபுரியில் இருந்த சந்நியாசி எப்போதும் விலை மாதுவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்.  அவள் ஏன் இவ்விடத்தை விட்டு சென்றாள். வேறு ஊரில் தொழில் செய்வாளோ? என தனக்குள் பல கேள்விகள் கேட்டுக் கொண்டார். அவளை தேடி ஊர், ஊராகவும் செல்ல ஆரம்பித்துவிட்டார்.


இப்படியே காலம் ஓடியது. ஒரேநாளில் விலைமாதுவும், சந்நியாசியும் இறப்பை தழுவினர். விலைமாதுவை, தேவர்கள் புஷ்பகவிமானத்தில் சொர்க்கலோகத்திற்கு அழைத்துச்சென்றனர். சந்நியாசியை எமதூதர்கள் இழுத்து சென்றனர். வழியில் விலைமாதுவை கண்டார் சந்நியாசி. அதிர்ந்த அவர் எமதூதர்களிடம் சந்நியாசியான என்னை நீங்கள் இழுத்து செல்கிறீர்கள்?, விலை மாதுவோ புஷ்பக விமானத்தில் செல்கிறாள். என்ன கொடுமை இது? என்று கேட்டார்.  நீர் சந்நியாசியாக இருந்தும் எப்போதும் இந்தப் பெண்ணைப் பற்றியும், அவளது தொழில் பற்றியுமே எண்ணிக்கொண்டிருந்தீர். ஆனால், அவளோ தான் செய்த பாவத்திற்கு நன்மைகள் செய்து விமோசனம் தேடிக்கொண்டாள். எனவே தான் அவளுக்கு இப்புண்ணிய நிலை கிடைத்தது என்றனர். சந்நியாசி தலை குனிந்த படியே நரகத்திற்குள் புகுந்தார்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen