Dienstag, 13. Januar 2015

கவலை

கண்ணன் கவலையுடன் இருந்தான். கோயிலுக்கு சென்ற அவன் சரஸ்வதி சன்னதிதானத்தில் நின்று கொண்டு, அம்மா, தாயே! என் வகுப்பில் படிக்கும் பல மாணவர்கள் என்னை விட நன்றாகப் படிக்கிறார்கள். நேற்று குருநாதர் ராமாயணம் கற்றுத் தந்தார். நான் ஏதோ ஒரு மனநிலையில் இருந்தேன். ஆசாரியர் சொல்லித் தந்ததை கவனிக்கவில்லை. கடைசியில் ராவணனின் தம்பி யார் என்று கேட்டார். நான் என் காதில் விழுந்த ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி வைப்போமே என்று லட்சுமணன் என சொல்லி விட்டேன். மாணவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். குருநாதர் என்னை போடா ஞானசூன்யமே என விரட்டி விட்டார். நான் வருத்தப்பட்டேன். அதே நேரம் அந்த கேலி சிரிப்பு என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தாயே! தயவு செய்து என்னையும் ஒரு கலாவல்லவன் ஆக்கி அருள் புரிவாய், என்றான்.சரஸ்வதி சிலையைக் கட்டிக் கொண்டு அழுதான். கருணைக்கடலான அந்த கல்வி தெய்வம் கண் விழித்தாள்.
மகனே! கவலைப்படாதே, யாரையும் நான் அறிவின்றி படைப்பதில்லை. ஆனால், குரு சொல்லிக் கொடுக்கும் போது, நீ அதைக் கவனியாமல், விளையாடிக் கொண்டிருந்தது உன் தவறுதானே! இனியேனும் இத்தவறைச் செய்யாதே. மேலும், பிறர் கேலி செய்வதை நாம் பொருட்படுத்தக் கூடாது. அந்த கேலிச்சொற்களை புகழுரையாக மாற்றிக் காட்ட வேண்டும். இதற்காக நான் உனக்கு அருள்புரிய மாட்டேன். நீயே சுயகட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க வேண்டும். அப்படி செய்து பார். மற்றவர்களை விட நீயே உயர்ந்த ஸ்தானத்திற்கு வருவாய், என்று கூறி மறைந்தாள். கண்ணன் இன்னொரு குருகுலத்திற்கு சென்றான். அவன் தன் குருகுலத்தில் இருக்க தகுதியுடையவன் தானா என அங்கிருந்த ஆசிரியர் சில கேள்விகளைக் கேட்டார். கண்ணன் அவரிடம், நடந்த விஷயத்தைச் சொன்னான். ஐயா, எனக்கு படிப்பில் அக்கறையின்மை இருந்தது. அதனால் ஏற்கனவே படித்த குருகுலத்தில் இருந்து விலக்கப்பட்டேன். நீங்கள் கேட்கும் கேள்விளுக்கு எனக்கு பதில் தெரியாது. என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக் கொண்டால், இனியேனும் நன்றாகப் படித்து தங்களிடம் நற்பெயர் பெறுவேன். என் மீது வீசப்பட்ட கேலிச் சொற்களை புகழுரையாக மாற்றிக் காட்டுவேன், என்றான். அவன் மீது இரக்கப்பட்ட குருநாதர், அவனை குருகுலத்தில் சேர்த்துக் கொண்டார். கண்ணன் புத்தகமும் கையுமாக அலைந்தான். வகுப்பில் மிக கவனமாக பாடங்களைக் கேட்டான். எதைக் கேட்டாலும் மணியடித்தது போல டாண் டாண் என பதில் சொன்னான்.

தினமும் அச்சிறுவனுக்கு ஆசிரியர் வேப்பிலை துவையல் வைத்து கஞ்சி கொடுத்தார். கண்ணன் துவையலை நாக்கில் தடவிக் கொண்டே கஞ்சி குடிப்பான். ஆனால், அது வேப்பிலை துவையல் என்ற சமாச்சாரமே அவனுக்கு தெரியாது. ஏனென்றால், சாப்பிடும் போதும் புத்தகத்தை கீழே வைக்க மாட்டான். படித்துக் கொண்டே சாப்பிடுவான். படிப்பின் மீதிருந்த அக்கறையில், சாப்பாட்டு சுவையெல்லாம் அவனுக்கு தெரியவே இல்லை. எல்லாப் பாடங்களிலும் நன்றாகத் தேறினான்.  ஒருநாள் குரு புத்தகமும், கஞ்சியுமாய் இருந்த சீடனை அழைத்தார். குரு கூப்பிடவும், துவையலை கண்ணன் எடுத்து வாயில் தடவவும் சரியாக இருந்தது. வாய் கசந்தது. அதற்கான காரணத்தை குருவிடம் கேட்டான். மாணவனே! நான் தினமும் உனக்கு வேப்பிலை துவையல் தந்தும் நீ படிப்பின் மீதிருந்த அக்கறையால் அதன் சுவையை உணரவில்லை. இன்று திடீரென கூப்பிடவும் சுவை தெரிந்தது. இந்த துவையலுக்கு பயந்தே பல மாணவர்கள் ஓடிவிட்டனர். நீயும் இன்னும் சிலரும் தான் எனது பரீட்சையில் தேறியுள்ளீர்கள். அதிலும் நீ மற்ற மாணவர்களை விட முன்னணியில் இருக்கிறாய், என்று பாராட்டினார். கண்ணன் மகிழ்ந்தான்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen