Sonntag, 4. Januar 2015

சந்தேகம்

ஒரு சமயம் இந்திராதி தேவர்களுக்குள் ஒரு சந்தேகம் உண்டாயிற்று பக்தர்களில் யார் சிறந்தவர் என்று இறைவன் கருதுகிறார் என்பதே அது. எல்லாரும் பிரம்மதேவரின் தலைமையில் விஷ்ணுவைச் சந்திக்கச் சென்றனர். மகாவிஷ்ணு சொன்னார், பூவுலகில் மிகச்சிறந்த பக்தன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் நந்திதேவன். அவனை விடச் சிறந்த பக்தனை நான் இதுவரை கண்டதே இல்லை, என்றார். அவன் எங்கிருக்கிறான் பிரபுவே? என்றான் இந்திரன். அவன் பூமண்டலத்தை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தவன். இப்போது ராஜ்யத்தை துறந்து என்னருள் பெறுவதற்காக கடுமையான உபவாசம் மேற்கொண்டுள்ளான். அந்த உபவாசம் கூட இன்று முடிகிறது. நான் அவனுக்கு அருள் செய்ய கிளம்பிக் கொண்டிருக்கிறேன், என்றார் விஷ்ணு. பிரபு! சற்று பொறுங்கள். தங்கள் அனுமதியுடன் அவனை சோதித்து பார்க்க விரும்புகிறோம், என்றனர் இந்திராதி தேவர்கள். விஷ்ணு ஏதும் சொல்லவில்லை. பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, பாம்பணையில் துயில் கொண்டு விட்டார். பிரம்மாவின் தலைமையில் அக்கோஷ்டியினர் நந்திதேவனின் இருப்பிடத்தை அடைந்தனர்.
ஒரு திட்டம் வகுத்தனர். வாயு அக்னியிடம், அடேய் அக்னி! ஒருவனுக்கு பசி வந்திட பத்தும் பறந்திடும். இன்று உபவாசம் முடியும் வேளை. பயல் பட்டினியாய் கிடப்பான். உபவாசம் முடிந்து உணவு உண்ண போகும் போது, அதை நாம் மாறுவேடத்தில் போய் கேட்போம். அவன் திண்டாடிப் போவான். உணவு தர மாட்டான். அவனது யோக்கியதை வெளிப்பட்டு விடும், என்றான். இருவரும் புறப்பட்டனர் சந்நியாசி வேடத்தில். நந்திதேவன் உபவாசம் முடித்து அசதியுடன் சமைத்தும் செய்து முடித்தான். நீராடி விட்டு, இலையைப் போட்டான். சந்நியாசிகள் வந்து விட்டனர். தம்பி! நாங்கள் நீண்ட நேரம் நடந்து பசியோடு வந்துள்ளோம். ஏதாவது இருந்தால் கொடப்பா, என்றனர். நந்திதேவன் புன்னகைத்தான். சரியான சமயத்தில் வந்தீர்கள். உபவாசம் முடிப்பவன், உணவை பிறருக்கு அளித்து விட்டு சாப்பிட வேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி போலும். இதோ சாப்பிடுங்கள், என தனக்கு சமைத்த உணவை அவர்களுக்கு கொடுத்தான். அவர்கள் வாங்கிச் சென்றனர். அவர்கள் சென்றதும், தன் கமண்டலத்தில் இருந்த தண்ணீரைக் குடிக்க எடுத்த போது, ஐயா சாமி! தாகமா இருக்கு. ஒரு குவளை தண்ணீர் இருந்தால் கொடுங்களேன், என்று வந்து நின்றான் பிச்சைக்கார வடிவில் வந்த இந்திரன்.

நந்திதேவன் கமண்டலத்தை எடுத்து அவனிடம் கொடுத்து, ஐயா! தங்கள் தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள், என்றான். பிச்சைக்கார வடிவில் வந்தவன், ஐயா தாங்கள் பெரிய தபஸ்வி. நானோ பிச்சையெடுப்பவன். கையெல்லாம் புண்கள். ரத்தம் கொட்டுகிறது. என் கைகள் இந்த புனிதமான கமண்டலம் மீது படலாமா? இன்னொரு விஷயம். நான் தாழ்ந்த குலத்தினன் வேறு, என்றான் அழுதபடியே. அவனை நந்திதேவன் அணைத்துக் கொண்டான். பச்சிலைகளைப் பறித்து வந்து புண்களுக்கு அரைத்து போட்டு ஒரு துணியால் கட்டினான். ஐயா! வியாதி எல்லா மனிதருக்கும் பொதுவானது. மனிதர்களில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்றில்லை. எல்லாரும் ஒன்றே, தாங்கள் தண்ணீர் அருந்துங்கள், என்றான். இந்திரன் தன் சுய உருவை எட்ட, முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கே வர, பெருமாளும் அங்கே பிரசன்னமானார். அனைவரும் நந்திதேவனை வாழ்த்தினர்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen