Donnerstag, 15. Januar 2015

பாணர்

ஸ்ரீரங்கம் அருகில் ஒரு அழகான சிற்றூர். இவ்வூரில் பாணர் இனத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் இருந்தார். இப்பக்தர் ஸ்ரீரங்கநாதர் மீது மிகுந்த பக்தியும், நன்றாகப் பாடும் திறமையும் கொண்டவர். ஆலயம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்ய அவர் பிறந்த குலம் தடையாக இருந்தது. அதனால், அவர் தினமும் காவிரியின் கரையில் நின்றபடி ரங்கநாதர் கோயிலைப் பார்த்து இரு கரம் கூப்பித் தொழுது பாடிச் செல்வார். ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் லோக சாரங்கி. ஒருநாள் இவர் கோயில் கைங்கர்யம் செய்வதற்காக காவிரியில் நீராடிவிட்டு வந்தார். பாணர் அர்ச்சகர் வரும் பாதையில் நின்று கண்களை மூடி ரங்கநாதரை நினைத்து மிக உருக்கமாக பாடிக்கொண்டிருந்தார். அர்ச்சகர் வருவதை இவர் அறியவில்லை. உடனே அர்ச்சகர், ஏய்... பாணா? ஒதுங்கி நில். நான் கோயிலுக்கு அவசரமாக செல்ல வேண்டும், என்றார். இறைவனிடம் மனம் லயித்திருந்த பாணனுக்கு அர்ச்சகர் கூறிய வார்த்தைகள் கேட்கவில்லை. அதனால், அர்ச்சகர் ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசினார்.
கல் பாணர் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. பாணர் கண் திறந்து பார்த்தார். ஐயோ! அர்ச்சகர் வரும் பாதையில் நின்று அபச்சாரம் செய்துவிட்டோமே என்று வருந்தி தள்ளி நின்று மீண்டும் பாட ஆரம்பித்தார். அர்ச்சகர் கோயிலுக்கு போனார். அங்கே ரங்கநாதரைப் பார்த்த அர்ச்சகர் பயந்து திகைத்தார். சிலையின் நெற்றியிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஐயோ! இது என்ன? அபச்சாரம்? என்று கதறியபடி சுவாமியின் நெற்றியில் இருந்து வழியும் ரத்தத்தைத் துடைத்தார். ரத்தம் நிற்கவில்லை. மறு படியும் துடைத்தார். ரத்தம் நிற்காமல் வழிந்துகொண்டே இருந்தது. ரங்கநாதா! இது என்ன சோதனை? யாரால் இது விளைந்தது? என்று உருக்கமாகக் கேட்டார். அப்போது, லோகசாரங்கி! உமது செயலால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரிக்கரையில் என் பக்தன் பாணன் மீது கல் வீசினீரே, அக்கல் அவன் மீது மட்டும் பட்டு ரத்தம் வடியவில்லை. என் நெற்றியிலும் பட்டு ரத்தம் வழிகிறது. நான் பக்த பாராதீனன் இல்லையா? என்று அசரீரி ஒலித்தது. ரங்கநாதா! தவறு செய்துவிட்டேன். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்று கதறினார். ஹே... லோக சாரங்கா! என் பக்தன் பாணனை உம் தோளில் சுமந்து என் சன்னதிக்கு அழைத்து வாரும். அப்போதுதான் ரத்தம் நிற்கும் என்றது அசரீரி. உடனே அர்ச்சகர் அங்கிருந்தவர்களிடம் எல்லோரிடமும் தான் செய்த தவறையும், பெருமாளின் உத்தரவையும் கூறி, பாணனை அழைத்துவர காவிரிக் கரைக்கு சென்றார். பாணரிடம் நடந்த விபரத்தைச் சொல்லி பொறுத்தருளுமாறு வேண்டினார்.

சுவாமி! நான் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவன். நான் கோயிலுக்குள் வரக் கூடாது. என்னால் வரமுடியாது என்றார். இல்லை பாணரே! நீர் அப்படி சொல்லக்கூடாது. நீர் பெரும் பாக்கியம் செய்தவர். பெருமாளே உம்மை என் தோளில் சுமந்துவரச் சொன்னார் என்றார் அர்ச்சகர். பாணர் அர்ச்சகர் தோளில் அமர சங்கடமும் கூச்சமும் கொண்டார். ஆனால், அரங்கன் கட்டளையாயிற்றே. என்ன செய்வது என்று கண்களை மூடி ஒரு கணம் ஸ்ரீரங்கநாதரை தியானித்தார். அவரைத் தோளில் ஏற்றிச் சுமந்து ரங்கநாதர் சன்னதி முன் கொண்டுவந்து இறக்கினார் அர்ச்சகர். அரங்கனின் சன்னதிக்குள் சென்றார் பாணர். மனம் உருக அரங்கனின் திருமுடி முதல் திருவடி வரை வர்ணனை செய்து பத்துப் பாடல்கள் பாடினார். அப்படியே அரங்கனின் ஜோதியில் ஐக்கியமானார்.

1 Kommentar: